ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
முஸ்லிம்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான் பண்டிகை. இந்த பண்டிகையை நேற்று நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் நேற்று ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அதிகாலையிலேயே எழுந்து புத்தாடைகளை அணிந்து பள்ளி வாசல்களுக்கு முஸ்லிம்கள் சென்று அங்கு நடந்த சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். சிறுவர், சிறுமிகளும் விதவிதமான ஆடைகளை அணிந்தபடி தொழுகையில் கலந்து கொண்டனர்.
சிறப்பு தொழுகை
கடலூர் டவுன்ஹாலிலும் நேற்று காலை ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர். பின்னர் தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கை குலுக்கி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இதேபோல் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை லால்கான் தோப்பில் உள்ள ஈத்கா குத்பா பள்ளி வாசலிலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் லால்பேட்டை பகுதியை சேர்ந்த திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கடலூர் முதுநகர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று சிறப்பு தொழுகை நடைபெற்றது.