விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம் பகுதியில்ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம் பகுதியில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
முஸ்லிம்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான் பண்டிகை. இந்த பண்டிகையை நேற்று நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அப்போது ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர். மேலும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
பரங்கிப்பேட்டை-ராமநத்தம்
அந்த வகையில் பரங்கிப்பேட்டை வாத்தியாபள்ளி திடலில் ஏராளமான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தினர் செய்திருந்தனர். இதேபோல் புவனகிரி மற்றும் பி.முட்லூர், கோவிலம் பூண்டி, பள்ளிப்படை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசலிலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.
ராமநத்தத்தில் உள்ள மஸ்ஜித் அஸ்ஹாப் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் 700-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
வடலூர்
வடலூர் ஈத்கா திடலில் ஜமாத் தலைவர் பக்ருதீன் தலைமையில் சிறப்பு தொழுகை முடிந்து. பின்னர் முஸ்லிம்கள் அனைவரும் ஊர்வலமாக சென்று வடலூர் 4 முனை சந்திப்பில் சமூக மத நல்லிணக்கம், சகோதரத்துவத்தை கடை பிடிக்க வேண்டி உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதில் சையது அபுதாஹீர், பஷீர் அஹமது மற்றும் சல்மான் பாரிஸ், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். பின்னர் கடலூர் மாவட்ட அரசு தலைமை காஜியும், லால்பேட்டை அரபுக்கல்லூரி முதல்வருமான நூருல் ஆமின் ஹஜ்ரத் தலைமையில் சிறப்புதொழுகை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அரபுக் கல்லூரி துணை முதல்வர் சைபுல்லாஹஜ்ரத் ரம்ஜான் பண்டிகை பற்றி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். இதில் லால்பேட்டை பகுதியில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதேபோல் எள்ளேரி, ஆயங்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது.
பண்ருட்டி-நெல்லிக்குப்பம்
பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஊர்வலமாக அன்வர் ஷா ஈத்கா மைதானத்திற்கு வந்தனர். இதையடுத்து அங்கு ஹஜ்ரத் நூர் முகம்மதுஷா தர்கா பள்ளிவாசல் பேஷ்இமாம் இஸ்மாயில் சிறப்பு தொழுகை நடத்தினார். இதில் பண்ருட்டி நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஊர்வலமாக நெல்லிக்குப்பம் கொத்பா பள்ளி வாசல் வளாகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பெண்கள் தங்கள் வீடுகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்
விருத்தாசலம் நவாப் ஜாமியா மஸ்ஜித் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் அனைத்து பள்ளி வாசல் முத்தவல்லிகள் மற்றும் முஸ்லிம்கள் கலந்து கொண்டு உலக நன்மை வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதற்கு கடலூர் மாவட்ட ஜமாத்துல்உலமா சபையின் தலைவர் சபியுல்லா மவுலானா தலைமை தாங்கினார். இதில் முத்தவல்லி முஸ்தபா பயான், சையது இப்ராகீம் ஹசனி, சையது இப்ராகீம் ஹைரி, இம்தியாஸ் இர்ஹாதி, பசீர் அகமது ஆலிம், சோழன் சம்சுதின் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி அப்பகுதியில் சுகாதார பணிகளை மேற்கொள்ள நகரமன்ற கவுன்சிலர் ஷகிலா பானு ராஜா முகமது நடவடிக்கை மேற்கொண்டார். இதேபோல் கடலூர் முதுநகர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
சிதம்பரம்
சிதம்பரம் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் சிதம்பரம் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் லால்கான் தெரு பள்ளிவாசல் நிர்வாக குழு தலைவர் டாக்டர் ஜவகர், செயலாளர் செல்லப்பா என்கிற ஜியாவுதீன், நிர்வாகி முகமது அலி, லப்பை தெரு பள்ளிவாசல் தலைவர் ஹீலிம், ஜாகிர் உசேன் உள்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.