கபிலர்மலையில்புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
பரமத்திவேலூர்:
கபிலர்மலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் தீபா தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கபிலர்மலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவநேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலம் கபிலர்மலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தின்போது புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கோஷங்களை எழுப்பியும், பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஆசிரிய, ஆசிரியைகள், சுகாதார ஆய்வாளர்கள் வினோத் பாபு, சுரேந்தர் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.