சென்னையில் பலத்த காற்றுடன் மழை
சென்னையில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து போனார்கள்.
சென்னை,
தமிழ்நாட்டில் கோடை வெயிலுக்கு விடை கொடுக்கும் வகையில், கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வெயிலின் தாக்கமும் குறைந்து வருகிறது.
தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாவே குளிர்ந்த காற்று வீசுவதுடன், அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. கடந்த 19-ந்தேதி கூட விடிய விடிய கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து இதமான சூழலே நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு மேல் வெயில் ஓய்ந்து வானம் சற்று மப்பும் மந்தாரமுமாகவே காட்சியளித்தது. எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற சூழ்நிலை நிலவியது.
திடீர் மழை
பிற்பகல் 3 மணிக்கு மேல் லேசாக மழை பெய்ய தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் 'சடசட'வென மழை வெளுத்து வாங்க தொடங்கியது. ஸ்கேல் வைத்து கோடு போட்டதுபோல, நேர்கோட்டில் மழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது. அந்தவகையில் சென்னையில் கோயம்பேடு, பெரம்பூர், புளியந்தோப்பு, பட்டாளம், பெரியமேடு, வேப்பேரி, கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், திருமங்கலம் உள்ளிட்ட அனேக இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
இந்த திடீர் மழையால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள்தான் தவித்து போனார்கள். ஆங்காங்கே கடைகள் மற்றும் பஸ் நிலையங்களில் மழைக்காக ஒதுங்கி நின்றனர். ரெயின் கோட்டு வைத்திருந்தவர்கள் பந்தாவாக மழையில் செல்ல, 'இன்னைக்கு பார்த்து மறந்து போச்சே...' என்ற புலம்பலுடன் பலர் பரிதாபமாக மழையில் ஓட்டமும், நடையுமாக சென்றதை பார்க்க முடிந்தது. இந்த திடீர் மழை மாலை 4.15 மணி வரை நீடித்தது.
போக்குவரத்து நெரிசல்
சுமார் 1 மணி நேரம் பெய்த மழைக்கே, சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. குறிப்பாக அண்ணாசாலை-ராயப்பேட்டை இணைப்பு சாலையான ஜி.பி.சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்து சென்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல நகரின் முக்கிய சாலைகளிலும் மழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல பட்டாளம், புதுப்பேட்டை, புளியந்தோப்பு, பெரியமேடு, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் எட்டி பார்த்தது.
சென்டிரல் ரெயில் நிலையம் அருகே சாலையில் போடப்பட்டிருந்த தடுப்புகள், வீசும் காற்றின் வேகத்தால் 'படார்' என பல அடி தூரம் சரிந்து விழுந்தது. இதனால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவ-மாணவிகளும் தவித்து போனார்கள்.
பூமி குளிர்ந்தது
இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் மழைநீர் அகற்றும் பணியில் ஈடுபட தொடங்கினார்கள். சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்திருந்தன. அதனையும் மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தினர்.
எது எப்படியோ... ஒரு மணி நேர மழை காரணமாக பூமி மீண்டும் குளிர்ந்து போனது. சென்னையில் 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் மக்கள் மனங்களும் குளிர்ந்து போனது.