சேலத்தில் இடியுடன் கூடிய மழை
சேலத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழையின் தாக்கம் குறைந்து பனிப்பொழிவு அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில், சேலத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. அதன்பிறகு பிற்பகல் 3 மணியளவில் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதனால் சாலையிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பழைய மற்றும் புதிய பஸ்நிலையம், அழகாபுரம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்படடி உள்பட பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. அஸ்தம்பட்டி காந்திரோடு பகுதியில் சாலையோரம் இருந்த ஒரு மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் அங்கு மின்சாரம் தடைபட்டது. பின்னர் அதை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.