குமரியில் மழை நீடிப்பு: அணைகளில் இருந்து வினாடிக்கு 2,888 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளில் இருந்து வினாடிக்கு 2,888 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளில் இருந்து வினாடிக்கு 2,888 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. கொட்டாரத்தில் அதிகபட்சமாக 70.4 மி.மீ. மழை பதிவானது.
வடகிழக்கு பருவ மழை
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தினமும் மழை பெய்து வருகிறது. இதே போல நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மழை காரணமாக ஆரல்வாய்மொழி மற்றும் செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் சூளை தொழில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதே போல மேற்கு மாவட்ட பகுதிகளில் ரப்பர் பால் எடுக்கும் தொழிலும் பாதிப்பு அடைந்துள்ளது.
மேலும் கொட்டாரம் பகுதியில் வயல் வெளியில் தண்ணீர் சூழ்ந்து குளம் போல காட்சி அளிக்கிறது. இதே போல பல்வேறு வயல்களில் மழை நீர் தேங்கி இருப்பதால் அதை அப்புறப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
கொட்டாரத்தில் அதிகபட்ச மழை
குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த மழையில் அதிகபட்சமாக கொட்டாரத்தில் 70.4 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதே போல பூதப்பாண்டி-10.4, களியல்-43.7, கன்னிமார்-9.2, குழித்துறை-34, மயிலாடி-32.2, நாகர்கோவில்-2, புத்தன்அணை-53.8, சுருளகோடு-28, தக்கலை-39.2, இரணியல்-4.6, பாலமோர்-10.2, திற்பரப்பு-47.4, ஆரல்வாய்மொழி-2.2, கோழிப்போர்விளை-18.2, அடையாமடை-29.4, குருந்தன்கோடு-2.8, முள்ளங்கினாவிளை-12.6, ஆனைகிடங்கு-34 என்ற அளவில் மழை பெய்திருந்தது.
இதே போல அணை பகுதிகளை பொறுத்த வரையில் பேச்சிப்பாறை-52.2, பெருஞ்சாணி-57.2, சிற்றார் 1-28.4, சிற்றார் 2-43.2, மாம்பழத்துறையாறு-33, முக்கடல்-11.3 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
அணைகள் நிலவரம்
தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்தபடியே உள்ளது. இதன் காரணமாக 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 42.38 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1,175 கனஅடி தண்ணீர் வந்தது.
இதே போல பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71.07 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,112 கனஅடி தண்ணீர் வருகிறது. சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 13.61 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 160 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார் 2 அணையின் நீர்மட்டம் 13.71 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 221 கனஅடி தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 7 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
அதே சமயம் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 1,016 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 1,872 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும், கோதையாற்றிலும் விடப்பட்டு இருக்கிறது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. 8-வது நாளாக அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதே சமயத்தில் திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரி நடந்து வருகிறது.
மண்ணை அள்ளும் பணி
கடந்த மழையின் போது சிற்றாறு பட்டணம் கால்வாயில் குலசேகரம் அருகே கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டு கால்வாயில் மண் நிரம்பியதால் கால்வாயில் தண்ணீர் விடுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் அந்த மண்ணை அள்ளும் பணிகள் நேற்று தொடங்கின.