ரெயில்வே தண்டவாளத்தை சீரமைக்கும் பணி
பொள்ளாச்சி-கிணத்துக்கடவு இடையே ரெயில்வே தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடந்தது. இதை ரெயில்வே கோட்ட என்ஜினீயர் பிரிவு அதிகாரி சுதீந்திரன் ஆய்வு செய்தார்.
கிணத்துக்கடவு
பொள்ளாச்சி-கிணத்துக்கடவு இடையே ரெயில்வே தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடந்தது. இதை ரெயில்வே கோட்ட என்ஜினீயர் பிரிவு அதிகாரி சுதீந்திரன் ஆய்வு செய்தார்.
அகல ரெயில் பாதை
திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக போத்தனூர் வரை மீட்டர் கேஜ் ரெயில் பாதை இருந்தது. இது அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. மேலும் மின்மயமாக்கப்பட்டது.
இந்த வழித்தடத்தில் கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழனி, மதுரை செல்லும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகிறது. இங்கு அனைத்து ரெயில்களும் 80 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. ஆனால் வேகத்தை அதிகரித்து கூடுதல் ரெயில்களை இயக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதை ஏற்று வேகத்தை அதிகரிக்க தண்டவாளத்தின் உறுதித்தன்மையை ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சீரமைப்பு பணி
இந்தநிலையில் நேற்று கிணத்துக்கடவு ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை சீரமைக்கும் பணி பிரத்யேக எந்திரம் மூலம் நடைபெற்றது. தண்டவாளத்தின் கீழ் பகுதியில் தேங்கி இருந்த மண்ணை அகற்றி ஜல்லிக்கற்கள் போடப்பட்டது. இதில் 30 ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த பணிகளை பாலக்காடு ரெயில்வே கோட்ட என்ஜினீயர் பிரிவு மூத்த அதிகாரி சுதீந்திரன் ஆய்வு செய்து கண்காணிப்பில் ஈடுபட்டார்.
கூடுதல் ரெயில்கள்
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க தண்டவாளங்களை தீவிரமாக ஆய்வு செய்து, ேதவையான இடங்களில் சீரமைப்பு பணியை மேற்கொண்டு வருகிறோம். இந்த பணி தற்போது பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வரை 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த பணிகள் முடிவடைந்ததும் இந்த வழித்தடத்தில் ரெயில்களை 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக கூடுதல் ரெயில்களும் இயக்கப்படலாம். இது தொடர்பாக முறையான அறிவிப்பு வெளியாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.