மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
சிங்கம்புணரி பகுதியில் மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி பகுதியில் மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
மஞ்சுவிரட்டு
சிங்கம்புணரி நகர் பகுதி மற்றும் கிருங்காக்கோட்டை, காளாப்பூர், மு. சூரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மாட்டு பொங்கல் அன்று மாபெரும் மஞ்சு விரட்டு விழா நடத்தப்படுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டும் சிங்கம்புணரியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நேற்று மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.
மஞ்சுவிரட்டு விழாவை முன்னிட்டு சிங்கம்புணரி முழு வீரன் தெருவில் இருக்கும் கோவில் மாடு தொழுவத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தொழுவத்தில் அடைக்கப்பட்ட சிங்கம்புணரி சேவுக அய்யனார் கோவில் காளைகளுக்கு ஜவுளி எடுத்து வரப்பட்டு கிராமத்தார் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. கோவில் காளைகளுக்கு துண்டு கட்டப்பட்டு தொழுவத்திலிருந்து திறந்து விடப்பட்டன. கோவில் காளைகள் ஒன்றின் பின் ஒன்றாக ஊர்வலமாக சென்றன. அதனை பாரம்பரிய முறைப்படி மரியாதை செய்து மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் தொட்டு வணங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து சீரணி அரங்கம் முன்பு ஒன்றன்பின் ஒன்றாக மஞ்சுவிரட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சுமார் 150-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சில மாடுகள் மட்டுமே பிடிபட்டன. பெரும்பாலான காளைகள் பிடிபடாமல் வெளியேறின.
அ.காளாப்பூர்
அதேபோல் அ.காளாப்பூரில் மஞ்சுவிரட்டு விழா நேற்று மாலை 4 மணியளவில் நடத்தப்பட்டது. மஞ்சுவிரட்டில் கிராமத்தினர் ஒவ்வொரு தொழுவத்திற்கு சென்று 100-க் கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்து விட்டனர். மு.சூரக்குடி கிராமத்திலும் நடந்த மஞ்சுவிரட்டில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடபட்டன. இதேபோல் கிருங்காக்கோட்டை, பிரான்மலை உள்ளிட்ட பகுதிகள், கருப்பர் கோவில்பட்டியிலும் மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது.
சிங்கம்புணரி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 30-க்கும் மேற்பட்டோர் சிறு காயங்கள் அடைந்தனர். அதில் சிங்கம்புணரி கூத்தாடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சின்ன காளை மகன் முருகேசன் (54) மற்றும் கருப்பர் கோவில்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் மகன் பரமசிவம் (27) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவருக்கும் சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.