மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
நம்புதாளையில் கோவில் திருவிழாவையொட்டி நடந்த வடமாடுமஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. மாடு முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.
தொண்டி,
நம்புதாளையில் கோவில் திருவிழாவையொட்டி நடந்த வடமாடுமஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. மாடு முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.
கோவில் திருவிழா
திருவாடானை தாலுகா நம்புதாளை கண்மாய்கரை குடியிருப்பு காளசித்தி விநாயகர், முத்துமாரியம்மன், கருமாரியம்மன் கோவில் 18-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து தீபாராதனை, பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனையொட்டி கிராமத்தார்கள் மற்றும் நேரு யுவகேந்திரா இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை,புதுக்கோட்டை, மதுரை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 14 மாடுகள் விடப்பட்டது. ஒவ்வொரு மாட்டிற்கும் 9 வீரர்கள் களம்இறங்கி மாடு பிடித்தனர். 6 மாடுகள் பிடிபட்டது. 8 மாடுகளை வீரர்கள் அடக்க முடியவில்லை.
10 பேர் காயம்
மாடுகளை பிடிக்க முயன்ற சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த சபரி (வயது 21) சத்தியமங்கலம் சுகுமார் (24),திவாகர் (22), வாசு (19) உள்பட 10 வீரர்கள் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மஞ்சுவிரட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.