தம்மம்பட்டி அருகே கோனேரிப்பட்டி கிராமத்தில் தூய சலேத் அன்னை தேர்பவனி திருமணம் ஆகாத பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்து பிரார்த்தனை
தம்மம்பட்டி அருகே கோனேரிப்பட்டி கிராமத்தில் தூய சலேத் அன்னை தேர்பவனி நடந்தது.
தம்மம்பட்டி,
தம்மம்பட்டி அருகே கோனேரிப்பட்டியில் உள்ள தூய சலேத் அன்னை மிகவும் சிறப்பு மிக்கது. பிரான்ஸ் நாட்டில் தூய சலேத் அன்னை நேற்று காட்சி அளித்த நாளான அதே நாளில் கோனேரிப்பட்டி கிராமத்தில் தூய சலேத் அன்னை ஆலயம் உருவாகியது. இதை நினைவுகூரும் வகையில் நேற்று கிராமத்தில் தூய சலேத் அன்னை தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி கூட்டு திருப்பலி நடந்தது. தேவாலய வளாகத்தில் காலை 10 மணி முதல் இரவு வரை அன்னதானம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த அன்னதானத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மாலை 5 மணி அளவில் தேவாலயத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக தூய சலேத் அன்னை தேர்பவனி நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த தேர்ப்பவனி வரும் போது தூய சலேத் அன்னையின் மீது உப்பு வைத்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள்.
தேர் பவனிக்கு முன்பாக, திருமணம் ஆகாதவர்களும், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களும் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். அடுத்தாண்டு இந்த தேர் பவனி தொடங்குவதற்குள் அவர்களின் நேர்த்திக்கடன் நிறைவேறும் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை ஆகும். இதேபோல் தூய சலேத் அன்னை மீது இருக்கும் மாலையை தங்கள் வீடுகளில் வைத்தால் வீடுகளில் எந்த தீய சக்தியும் நெருங்காது, நோயால் அவதிப்பட்டு வருபவர்கள் தூய சலேத் அன்னையின் மீது போடப்படும் மாலையை வீட்டிற்கு எடுத்து சென்றால் குணம் ஆகிவிடும் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை என்பதால் போட்டி போட்டு கொண்டு மாலையை காத்திருந்து வாங்கி சென்றனர்.
மேலும் இந்த தேர்பவனியில் ஏராளமான பெண்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு தூய சலேத் அன்னை தேர்பவனியுடன் ஜெபம் பாடிக்கொண்டு சுற்றி வந்தனர். அதன்பிறகு இரவு 10 மணி அளவில் தேர்பவனி தேவாலயத்துக்கு வந்தவுடன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.