900 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய திட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் 900 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறினார்.
கொப்பரை தேங்காய் கொள்முதல்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த கொப்பரை தேங்காய் விளைபொருளை மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு கொள்முதல் இலக்காக 900 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யும் பணி நடைபெற உள்ளது.
தற்போது தேங்காய்ப்பருப்பு விலை 1 கிலோ ரூ.75 முதல் ரூ.80 வரை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவை கொப்பரை தேங்காய் விலை 1 கிலோ ரூ.108.60-க்கும், பந்து கொப்பரை தேங்காய் 1 கிலோ ரூ.117.50-க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
வங்கி கணக்கில் பணம்
நாமக்கல் மாவட்டத்தில் கொப்பரை கொள்முதல் திட்டம் பரமத்திவேலூர், நாமகிரிப்பேட்டை மற்றும் திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் செயல்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு ஆகிய விவரங்களுடன் பரமத்திவேலூர், நாமகிரிப்பேட்டை மற்றும் திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் அலுவலகங்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
தேங்காய் கொப்பரை கொள்முதல் வருகிற ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. தேங்காய் கொப்பரை விளைபொருளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளின் நலனிற்காக மேற்கொண்டுள்ள இந்த கொள்முதல் திட்டத்தில் தென்னை விவசாயிகள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.