எம்.சூரக்குடியில் புரவி எடுப்பு திருவிழா


எம்.சூரக்குடியில் புரவி எடுப்பு திருவிழா
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 8 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எம்.சூரக்குடியில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி

எம்.சூரக்குடியில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

புரவி எடுப்பு திருவிழா

சிங்கம்புணரி அருகே சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட எம்.சூரக்குடி ஊராட்சி கோவில்பட்டியில் செகுட்டு அய்யனார் மற்றும் சூரக்குடியில் அமைந்துள்ள சிறைமீட்ட அய்யனார் மற்றும் படைத்தலைவி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்ட விழா முடிந்ததும் புரவி எடுப்பு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு புரவி எடுப்பு விழா நடைபெற்றது. முன்னதாக புரவி தயாரிக்கும் பணி கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி வேளார் வம்சாவளி குயவர்களிடம் பிடி மண் வழங்கப்பட்டது. 40-க்கும் மேற்பட்டோர் விரதம் இருந்து எம்.சூரக்குடி வேளார் வம்சாவளி மண்டபத்திலும் குதிரை பொட்டலிலும் 289 புரவிகள் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

289 புரவிகள்

பல்வேறு நேர்த்தி கடனுக்காக 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோவிலுக்கு புரவி செய்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்று கோவிலுக்கு வழங்குவது வழக்கம். குதிரை பொட்டலில் தயாராக இருந்த அரண்மனை புரவிகள் இரண்டுடன் நேர்த்திக் கடனுக்காக சுமார் 289 புரவிகள் நேற்று முன்தினம் குதிரை பொட்டலில் இருந்து எம்.சூரக்குடி மையப்பகுதியான கச்சேரி திடலிற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் நேற்று மாலை சுவாமி அழைத்து புரவிகள் புறப்பட தயாரானது. மேளதாளங்கள் முழங்க புரவிகள் எடுத்து வரப்பட்டன. எம்.சூரக்குடிலிருந்து கோவில்பட்டிக்கு சுமார் 5 கிலோமீட்டர் தூரம் இரண்டு மணி நேரத்தில் புரவிகள் கோவில் சென்றடைந்தது. புரவிகள் அனைத்தும் கோவில் அருகில் அடர்ந்த செடி கொடிகளுக்கு மத்தியிலும் கோவிலை சுற்றி வளாக பகுதியிலும் இறக்கி வைத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். மேலும் நேற்று மாலை கச்சேரி திடல் அருகில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நீர் மோர் பந்தல்

முன்னதாக புரவி எடுப்பு விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே ரெங்கநாதன் காந்திமதி டிரஸ்ட் மூலம் குடிநீர், நீர் மோர் பந்தல் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவற்றை அதன் உரிமையாளர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் தண்ணாயிரம், கவுரவ கண்காணிப்பாளர் ஆனந்த கிருஷ்ணன், பேஸ்கர் கரிகாலன், எம்.சூரக்குடி, கோவில்பட்டி கிராம மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை எம்.சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் மற்றும் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் செய்து இருந்தனர்.


Next Story