புகாா் பெட்டி
புகாா் பெட்டி
பராமரிப்பில்லாத பூங்கா
கோபிசெட்டிபாளையம் கோசலை நகரில் நகராட்சி பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் செடி, கொடிகள் வளர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. உடனே பூங்காவை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபிசெட்டிபாளையம்.
குவிந்துள்ள குப்பைகள்
அந்தியூா் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் பிரம்மதேசத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சில மாதங்களாக தேங்கி கிடக்கிறது. இதுதவிர சிலா் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறாா்கள். இதனால் கொசு மற்றும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. உடனே குப்பைகளை அள்ளவும், சாக்கடை வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கவும், கழிப்பிட வசதி செய்து தரவும் அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், செம்புளிச்சாம்பாளையம்.
பஸ் இயக்கப்படுமா?
அந்தியூரில் இருந்து ஒலகடம், குட்டமேடு வழியாக மும்மிரெட்டிபாளையம், காௌந்தபாளையம் வரை மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. அந்தியூர், பவானி பகுதியை சேர்ந்தவர்கள் இந்த பஸ்சை பயன்படுத்தி வந்தார்கள். கொரோனா காரணமாக இந்த பஸ் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் பஸ் இயக்கப்படவில்லை. எனவே அந்தியூர், பவானி சென்றுவர காலை, மாலை 2 நேரமும் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மும்மிரெட்டிபாளையம்.
திறந்தநிலையில் கிணறு
பவானி அருகே மயிலம்பாடி கிராமம் சாணார்பாளையம் காலனியில் திறந்த நிலையில் கிணறு உள்ளது. இதனால் சிறுவர்-சிறுமிகள் தவறி கிணற்றுக்குள் விழ வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக உயிரிழப்புகள் நிகழலாம். ஆபத்தான நிலையில் காணப்படும் கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
க.காளியப்பன், சாணார்பாளையம் காலனி.
ரோட்டில் பள்ளம்
ஈரோடு பெரியவலசுவில் இருந்து மாணிக்கம்பாளையம் செல்லும் ரோட்டில் பெட்ரோல் பங்க் முன்பு ஆபத்தான பள்ளம் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கிறார்கள். உடனே பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
சாக்கடையில் குப்பை
ஈரோடு முனிசிபல் காலனியில் சக்தி விநாயகர் கோவில் அருகே சாக்கடையில் குப்பைகள் கொட்டிக்கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் செல்ல முடியவில்லை. சாக்கடை முழுவதுமாக அடைத்துக்கொள்ளும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முனிசிபல் காலனியில் சாக்கடையில் உள்ள குப்பைகளை அள்ள ஆவன செய்யவேண்டும்
பொதுமக்கள், முனிசிபல் காலனி.
பாராட்டு
ஈரோடு முனிசிபல் காலனி கிருஷ்ணசாமி வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். உடனே குப்பைகள் அகற்றப்பட்டது. பொதுமக்கள் நலன் கருதி செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கிருஷ்ணசாமி வீதி, முனிசிபல் காலனி.