புதுக்கோட்டை வீராங்கனை பதக்கத்தை தந்தை சமாதியில் வைத்து அஞ்சலி
புதுக்கோட்டை வீராங்கனை பதக்கத்தை தந்தை சமாதியில் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே கல்லுகாரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்லமுத்து-ரீட்டா மேரி. இவர்களின் மகள் லோகபிரியா (வயது 22). இவர் தஞ்சை பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர், நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்க சென்று இருந்தார். போட்டிக்கு முன்பாக அவரது தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார். தந்தை இறந்த செய்தி மகளுக்கு தெரிந்தால் மகள் போட்டியில் தோல்வி அடைந்து விடுவார் என்று எண்ணிய அவரது தாய் ரீட்டா மேரி, தனது மகளுக்கு தந்தை இறந்த செய்தியை தெரிவிக்க வேண்டாம் என கூறிவிட்டார். லோகபிரியா பளுதூக்கும் போட்டியில் 50 கிலோ எடைபிரிவில் 350 கிலோ எடையை தூக்கி தங்க பதக்கம் வென்றார். பின்னர் அவர் சொந்த ஊர் திரும்பினார்.அவருக்கு அவரது தந்தை இறந்த செய்தியை கூறினர். அப்போது அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்நிலையில், லோகபிரியா நேற்று அவரது தந்தை சமாதியில் தங்க பதக்கத்தை வைத்து கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தினார். முன்னதாக கல்லுகாரன்பட்டி கிராமமக்கள் மிகுந்த சோகத்துடன் வீராங்கனையை வரவேற்றனர். பின்னர் லோகபிரியா கூறுகையில், நான் 6-ம் வகுப்பு படித்த காலம் முதல் பளுதூக்குதல் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டு மாவட்டம், மாநில அளவில் பல்வேறு பரிசுகளை பெற்று வந்தேன். இந்நிலையில் இந்திய அளவில் பளுதூக்கும் போட்டிக்கு தேர்வாகி நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்குதலில் தங்கப்பதக்கம் பெற்றேன். பளுதூக்குதலில் தங்கப் பதக்கம் பெற்ற சந்தோஷம் 5 நிமிடம் கூட எனக்கு இல்லை. தந்தை திடீர் மரண செய்தி கேட்டு கண்ணீர் சிந்தி கதறி அழுதேன். தமிழ்நாடு பளு தூக்கும் சங்க தலைவர் ராஜா, செயலாளர் நாகராஜன், எனக்கு பக்கபலமாக பல ஆண்டுகள் பயிற்சி வழங்கிய உடற்பயிற்சி பயிற்றுனர் ரவிச்சந்திரன் ஆகியோர் முயற்சியில் தங்க பதக்கம் பெற்றேன். மேலும் வறுமையிலும், இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளேன் என்றார்.