இரட்டை பதிவால் 37,965 பேர்கள் நீக்கம்: 21¼ லட்சம் வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்


இரட்டை பதிவால் 37,965 பேர்கள் நீக்கம்:    21¼ லட்சம் வாக்காளர்கள்    வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 21¼ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இரட்டை பதிவால் 37 ஆயிரத்து 965 பேர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கடலூர்


கடலூர் மாவட்டத்தில் கடந்த 5.1.2022 அன்று வெளியிடப்பட்ட புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டிய லின் படி, மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 21 லட்சத்து 69 ஆயிரத்து 492 வாக்காளர்கள் இருந்தனர். அதைத்தொடர்ந்து 5.1.2022 முதல் கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன.

இதில் பெயர் சேர்ப்பதற்காக 15 ஆயிரத்து 420 மனுக்கள் பெறப்பட்டதில் 13 ஆயிரத்து 37 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 2383 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பெயர் நீக்கலுக்காக 48 ஆயிரத்து 780 மனுக்கள் பெறப் பட்டதில் 47 ஆயிரத்து 727 மனுக்கள் ஏற்கப்பட்டன. 1053 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதில் இறந்ததாக 3103 பேரும், இடம் பெயர்வுக்காக 6659 பேரும், இரட்டை பதிவுக்காக 37 ஆயிரத்து 965 பேர் என மொத்தம் 47 ஆயிரத்து 727 பேர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

கலெக்டர் வெளியிட்டார்

இதைத்தொடர்ந்து 1.1.2023-யை தகுதி நாளாக கொண்டு நேற்று வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டார். இதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 லட்சத்து 51 ஆயிரத்து 236 ஆண்கள், 10 லட்சத்துக்கு 83 ஆயிரத்து 310 பெண்கள், 256 இதரர் என மொத்தம் 21 லட்சத்து 34 ஆயிரத்து 802 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2023-க்கு 1.1.2023-யை தகுதி நாளாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகளான பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தலுக்கான மனு அளிக்க கால அவகாசம் நேற்று முதல் 8.12.2022 வரையும், வாக் காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நாளை மறுநாள் (சனிக்கிழமை), 13.11.2022, 26.11.2022, 27.11.2022 ஆகிய நாட்களில் நடக்கிறது.

செல்போன் செயலி

ஆகவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம் நாட்களில் தங்களது வாக்குச்சாவடி மையங்களில் நேரடியாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ள உரிய படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளிக்கலாம்.

மேலும் http://www.nsp.in/, http://voterportal.eci.gov.in/ ஆகிய இணையதளங்கள் மற்றும் 'voter helpline " செல்போன் செயலி மூலமாகவும் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ளலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களது வாக்காளர் பட்டியல் விவரங்களை மேம்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதில் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ஜெகதீஸ்வரன், கோட்டாட்சியர் அதியமான்கவியரசு, தேர்தல் தாசில்தார் பாலமுருகன், துணை தாசில்தார் வெற்றிச்செல்வன், தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, தே.மு.தி.க. மாநகர செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அமர்நாத், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், பகுஜன் சமாஜ் கட்சி மாநில இளைஞரணி சுரேஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story