ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை


ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை
x

மார்த்தாண்டம் அருகே உள்ள ஞாறான்விளையில் ரேஷன் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே உள்ள ஞாறான்விளையில் ரேஷன் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரேஷன் கடை

மார்த்தாண்டம் அருகே உள்ள ஞாறான்விளையில் ஒரு ரேஷன் கடை இயங்கி வருகிறது. இது வாடகை கட்டிடத்தில் இயங்குவதால் கடையை மாற்ற வேண்டும் என்று கட்டிடத்தின் உரிமையாளர் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கடையை ஞாறான்விளையில் இருந்து திக்குறிச்சி செல்லும் சாலையில் ஒற்றிவிளை பகுதிக்கு மாற்ற அதிகாரிகள் முயற்சி செய்தனர்.

அந்த ரேஷன் கடையில் இருந்தபொருட்களை திடீரென்று ஒற்றிவிளை பகுதிக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

பொதுமக்கள் போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்த ஞாறான்விளை பகுதியில் உள்ள பொதுமக்கள் ரேஷன் கடை முன்பு திரண்டனர். அவர்கள் ரேஷன் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து, போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ரேஷன் கடை தற்போது இருக்கும் பகுதியில் ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளது. புதிதாக மாற்றப்படும் ஒற்றிவிளை பகுதியில் வெறும் 300 குடும்ப அட்டைகள் மட்டுமே உள்ளது.

பேச்சுவார்த்தை

எனவே தற்போது உள்ள இடத்தில் இருந்து ரேஷன் கடையை மாற்ற கூடாது. அதே பகுதியில் ரேஷன் கடை தொடர்ந்து செயல்படுவதற்கு ஒரு மாதத்திற்குள் வேறு கட்டிடம் பார்த்து தருகிறோம், என்றனர். அத்துடன் ரேஷன் கடை கட்டிட உரிமையாளரிடம் மேலும் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் விளவங்கோடு தாலுகா உணவு வழங்கல் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்ததால் ரேஷன் கடையை இடமாற்றுவது கைவிடப்பட்டது. அதன்பின்னர் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து வழக்கம்போல் ஞாறான்விளை பகுதியில் ஏற்கனவே இருந்து வரும் அதே கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்க தொடங்கியது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story