ஜல்லிக்கட்டுக்கு டோக்கன் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்


ஜல்லிக்கட்டுக்கு டோக்கன் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்
x

இலுப்பூரில் ஜல்லிக்கட்டுக்கு டோக்கன் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் கலந்து கொள்ளும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்டு பின்னர் அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் சரிபார்த்து டோக்கன் வழங்கி வருகின்றனர். இதில், பல்வேறு குழப்பம் இருப்பதாகவும், அதனால் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வேண்டும் என ஒரு தரப்பினர் அலுவலர்களை வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில் இலுப்பூரில் ஆன்லைனில் அல்லாமல், நேரடியாகவும், மொத்தமாகவும் டோக்கன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒரு சில பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு டோக்கன் கிடைக்க வில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த ஒருசில பகுதிகளை சேர்ந்த காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இதனை கண்டித்து எங்கள் பகுதிக்கு டோக்கன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் இலுப்பூர் தாலுகா அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தாசில்தார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story