அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கைபொதுமக்கள், கலெக்டரிடம் மனு


அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கைபொதுமக்கள், கலெக்டரிடம் மனு
x

நாரைகிணறு பகுதியில் அன்சர்வே நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாமக்கல்

2,233 ஏக்கர் நிலம்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம், மத்துரூட்டு மற்றும் நாரைகிணறு ஊராட்சி பகுதிகளில் சுமார் 2,233 ஏக்கர் அன்சர்வே (புறம்போக்கு) நிலம் உள்ளது. இதில் அங்கு தலைமுறையாக வசித்து வரும் நபர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 98 குடும்பங்களுக்கு முதல்கட்டமாக பட்டா வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள நிலத்தை அளவீடு செய்து, அங்கு வசிக்கும் நபர்களுக்கு வழங்க தனிதாசில்தார் நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வடிவேலன் தலைமையில் நேற்று நாரைகிணறு, மத்துரூட்டு, உரம்பு, அண்ணாநகர், நாகப்பட்டினம், ஊத்துபுளிக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து, கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

தவறான தகவல்கள்

நாங்கள் வசிக்கின்ற பகுதி அன்சர்வே நிலம் ஆகும். இங்கு பல தலைமுறை காலமாக வசித்து வருகிறோம். தற்போது தமிழக அரசு எங்கள் பகுதிக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்து, அதற்கான தனி தாசில்தார் நியமித்து, அளவை பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் காழ்புணர்ச்சி காரணமாக இதை பொறுத்து கொள்ள முடியாத சிலர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வீண்பழி சுமத்தி வருகின்றனர். மேலும் பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதிகாரிகள் நேர்மையாக பட்டா வழங்க முயற்சி எடுத்து வருகின்றனர். எனவே தாங்கள் விசாரணை செய்து, சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

அவர்களுடன் நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் பி.கே.செந்தில், மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், மத்திய மாவட்ட தலைவர் தினேஷ் பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்டோர் வந்து இருந்தனர்.


Next Story