நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பொது அமைதியை கெடுக்க அனுமதிக்க கூடாது: முதல்-அமைச்சர் உத்தரவு


நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பொது அமைதியை கெடுக்க அனுமதிக்க கூடாது: முதல்-அமைச்சர் உத்தரவு
x

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பொது அமைதியை கெடுக்க திட்டமிடுபவர்களுக்கு இடமளித்து விடக்கூடாது என்று கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு நேற்று நடைபெற்றது.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்கினார்.

2-வது மாநாடு

இம்மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இந்த அரசு பொறுப்பேற்று நடைபெறும் 2-வது மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு இதுவாகும். கடந்த ஆண்டு மார்ச் 10-ந் தேதியன்று இதுபோன்ற மாநாடு நடந்தது.

கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுப் பணியை மேற்கொண்டபோதும் உங்களை சந்தித்தேன். அனைவரும் தங்களது ஆலோசனைகளை, எந்தவித தயக்கமுமின்றி, மக்கள் நலன் ஒன்றையே மையமாக கொண்டு அரசுக்கு வழங்க வேண்டும். இந்த அமர்வில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்து விவாதிக்க வேண்டும்.

சாலை விபத்துகள்

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்திக்காட்டுவது முதலாவது இலக்கு. பொது அமைதியைக் கெடுக்க நினைப்பவர்களை முழுமையாகத் தடுப்பது 2-வது இலக்கு. அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா? என்று திட்டமிடுபவர்களுக்கு இடமளித்துவிடக்கூடாது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த உள்நோக்கத்துடன் இத்தகைய சக்திகள் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும்.

கள்ளச்சாராயம், போதைப்பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். இது எதிர்காலத் தலைமுறையையே சீரழிக்கிறது. இது சம்பந்தமான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

சாலை விபத்துகளால் மிக அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுத்து, விபத்துகளைக் குறைப்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

சமரசம் கூடாது

சென்னை உள்ளிட்ட பல மாநகரங்களில் பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசலால் சிரமம் ஏற்படுகிறது. அதைக் குறைப்பதற்கான ஒரு சிறப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் இருக்கக்கூடாது. குற்றவாளிகளை உடனே கைது செய்து, தண்டனை பெற்றுத்தருவதில் மும்முரம் காட்டவேண்டும்.

பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை செயல்கள் குறித்து அம்மக்கள் மாவட்ட அலுவலர்களுக்கு அச்சமின்றி தகவல் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி நம்பரை மாவட்ட கலெக்டர்கள் அறிவிக்க வேண்டும்.

சமீபத்தில், தூத்துக்குடி மாவட்டம் மொறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மற்றும் திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆகியோரின் கொலை வழக்குகளில் காவல்துறை விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்தது பாராட்டத்தக்கது.

சமூக ஊடகங்களின் தாக்கம்

தற்போதைய காலகட்டத்தில், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர்களும், போலீஸ் சூப்பிரண்டுகளும் சமூக ஊடகங்களைத் தொடர்ந்து கண்காணித்து, பொய்ச் செய்திகளை பரப்புவோர் மீதும், சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்போர் மீதும் கடுமையான நடவடிக்கையை எடுப்பதோடு, அதற்குரிய உண்மை நிலையை சமூக ஊடகங்களில் தெளிவுபடுத்த வேண்டும்.

மாவட்ட நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து கருத்து கூறுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இம்மாநாட்டில் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

போலீஸ் அதிகாரிகள் மாநாடு

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ்துறை அதிகாரிகள் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஒரு அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமையும், சாதனையும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதுதான். அமைதியான மாநிலத்தில்தான் அனைத்து துறைகளும் வளரும். நான் அடிக்கடி வலியுறுத்துவது, குற்றங்களைக் குறைத்துவிட்டோம் என்பதாக அல்லாமல், குற்றம் நடைபெறாமல் தடுத்துவிட்டோம் என்பதாக தமிழ்நாடு போலீஸ்துறையின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் பக்கமாக, எளியோர் பக்கமாக போலீஸ் துறை இருக்க வேண்டும். இந்த அரசு நலிந்தோர், வறியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் நாடக்கூடிய அரசாகும். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் புகார் கொடுக்க வரும் மனுதாரர்களைக் கனிவுடன் நடத்துவதற்கும், அவர்களுக்கு வழிகாட்டவும் வரவேற்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பாளர்களை, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை மட்டுமே செய்ய சொல்ல வேண்டும். இவர்களை மற்ற பணிகளுக்கு பயன்படுத்துவதாக எனக்கு தெரிய வருகிறது. அது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். பெறப்படும் அனைத்து விண்ணப்பங்கள், புகார்களும் இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்டு, அதற்கான ஒப்புகைச் சீட்டு மனுதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

குண்டர் சட்டம்

நிலுவையில் உள்ள அனைத்து பிடியாணைகளையும் நிறைவேற்றி சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிப் போரைக் கைது செய்து, தேவைப்பட்டால், பொது அமைதியை நிலைநாட்ட குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனைப் பெற்றுத்தந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் மீது ஒரு நம்பிக்கை ஏற்படும். ஆகையால், போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் இதனை மாதந்தோறும் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கையை அனுப்ப வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல்

கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. சாதி- மத பூசல்கள் சிறிய அளவில் ஏற்படும் நிலையிலேயே கண்டறியப்பட்டு, முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு மற்றும் சாதி உணர்வுகளைத் தூண்டக்கூடிய பிரச்சினைகளில் கவனமுடன், மாவட்ட நிர்வாகத்திற்கு கீழான அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து சுமுகமான முறையில் தீர்வுகாண வேண்டும். அடுத்து வரும் 7, 8 மாதங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய காலம். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த காலகட்டத்தில் போலீசார் முதல் காவல்துறை உயரதிகாரிகள் வரை மிக எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும்.

சமூக ஊடகங்களின் நிகழ்வுகளையும் கண்காணித்து வர வேண்டும். அமைதி மற்றும் சட்டம், ஒழுங்கு நிலை நாட்ட உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

இன்று விவாதிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில் நீங்கள் ஒவ்வொருவரும், தங்கள் பொறுப்பை உணர்ந்து, உங்களுடைய மாவட்டத்திற்கு சிறந்த தலைமையாகச் செயல்படுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தங்கள் மாவட்டம், மாநகரத்தைப் பாதுகாப்பானதாகவும், அமைதியானதாகவும் பாதுகாத்து நமது அரசிற்கு நற்பெயரை ஈட்டித்தாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story