திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது
திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில், பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திருவள்ளூர், கடம்பத்தூர், மணவாள நகர், திருத்தணி, பெரியபாளையம் ஊத்துக்கோட்டை, செங்குன்றம் என சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த திரளான பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 275 கோரிக்கை மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
பின்னர் கலெக்டர் விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.4 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து கலெக்டர் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜோதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.