காஞ்சீபுரத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
முகாமில் தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தலைமையில் கிராம மக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் ஆர்த்தியிடம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் முழு நேர ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து 260 மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காஞ்சீபுரம் வட்டம், கீழ்கதிர்பூர் கிராமத்தை சேர்ந்த 4 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் தாட்கோ மூலம் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில தொழில் தொடங்க 4 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மானியத்துடன் கடன் உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, தாட்கோ மாவட்ட மேலாளர் தேவசுந்தரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.