காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பாளையக்குடி கிராமம் கீழத்தெருவில் கடந்த ஒரு மாதமாக சீரான முறையில் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் தெருவிளக்குகள் பழுதடைந்ததால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த பாளையக்குடி, கீழத்தெரு பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.