ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து விடிய, விடிய சாலை மறியல்


ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து விடிய, விடிய சாலை மறியல்
x

திருப்பத்தூரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் விடிய, விடிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் விடிய, விடிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

ஆக்கிரமிப்பு அகற்றம்

தமிழகத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை 200 ஹெக்டேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டது. 73 ஹெக்டேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.

இந்தநிலையில் திருப்பத்தூர் டவுன் சிவராஜ் பேட்டை. போஸ்கோ நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, தண்டபாணி கோவில் தெரு, ஏரிக்கோடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 750-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் நீர்நிலை பகுதிகளில் உள்ளது. இங்கு சுமார் பல ஆண்டுகளாக கடை மற்றும் வீடுகளை கட்டி பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவற்றை தாமாக முன்வந்து அகற்ற நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.

சாலை மறியல்

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பொக்லைன் எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. இதைக்கண்ட பொதுமக்கள் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திருப்பத்தூர் தொகுதி நல்லதம்பி எம்.எல்.ஏ. வீட்டின் முன்பு நேற்று முன்தினம் இரவு திரண்டனர். அவர்களிடம் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்க உள்ளதாகவும், மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஆனால் இதை ஏற்க மறுத்த பொதுமக்கள், அங்கிருந்து சென்று திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் அருகே தர்ணாவில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் கோட்டாட்சியர் லட்சுமி, தாசில்தா சிவப்பிரகாசம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் 10 நாட்கள் கால அவகாசம் கேட்டனர். அதற்குள் ஆக்கிரமிப்பு வீடுகளை போலீஸ் பாதுகாப்புடன் இடிக்க தொடங்கினர். இதைக்கண்டவுடன் தங்கள் பகுதிக்கு மீண்டும் வந்த அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் பஸ் நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் தனித்தனியாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தீக்குளிக்க முயற்சி

அப்போது சிலர் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது தாசில்தார் சிவப்பிரகாசம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் எலவம்பட்டி பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கி வீடு கட்டித்தரப்படும். எனவே கோர்ட்டு உத்தரவுப்படி நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒத்துழைப்புதர வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதற்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கும்படி பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

நேற்று காலை 10 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். நள்ளிரவு முதல் விடியவிடியநடந்த சாலை மறியல் மற்றும் தீக்குளிக்க முன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story