பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு - கிராம மக்களை சந்திக்க வந்த பி.ஆர்.பாண்டியன் கைது
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்களை சந்திக்க சென்ற விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்,
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. காஞ்சீபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட வளத்தூர், பரந்தூர், 144 தண்டலம், நெல்வாய், மேல்படவூர், மடப்புரம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஏகனாபுரம், எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கமாபுரம், சிங்கிலிபாடி என 12 கிராம பகுதிகளில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பரந்தூரில் புதிதாக அமைய உள்ள விமான நிலையத்திற்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். கிராம மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் ஏகனாபுரம் கிராம மக்களையும், விவசாயிகளையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் வருகை தர இருந்தார்.
உரிய அனுமதி பெறாமல் பி.ஆர்.பாண்டியன் ஏகனாபுரம் கிராம மக்களை சந்திக்க வருகை தருவது குறித்து தகவல் அறிந்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர் தலைமையில் ஏராளமான போலீசார் பரந்தூர், ஏகனாபுரம், கண்ணன்தாங்கல், நெல்வாய், உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள நீர்வள்ளூர் கிராம பகுதி வழியாக காரில் வந்த பி.ஆர்.பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் இருவர் உள்ளிட்ட மூன்று பேரையும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட மூவரையும் உத்திரமேரூர் அருகே உள்ள மாகரல் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் தங்களை சந்திக்க வரும் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வருவது ஏகனாபுரம் கிராம மக்கள் இடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.