தமிழக முன்னேற்றத்திற்கான திட்டங்களை 5 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும்: முதல்-அமைச்சர் உத்தரவு
தமிழக முன்னேற்றத்திற்கான முத்திரை திட்டங்களை 5 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டின் முத்திரை திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேசியதாவது:-
மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிக முக்கியமாக அடையாளம் காணப்பட்ட, அதிக நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்களை, அரசின் முத்திரை திட்டங்கள் என வகைப்படுத்தி, அந்த திட்டங்களை விரைந்து முடிக்க உங்கள் அனைவரையும் நான் ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்தேன்.
பல்வேறு துறை சார்ந்த திட்டங்களின் செயலாக்கத்தில் காணப்படும் சில சிக்கல்களுக்கான தீர்வுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்து இருக்கிறோம்.
கடந்த ஆய்வு கூட்டத்துடன் இந்த கூட்டத்தை ஒப்பிடும்போது பெரும்பாலான திட்டங்களில் சிறப்பான முன்னேற்றம் காணப்பட்டாலும், சில திட்டங்களில் கவனம் தேவைப்படுகிறது. தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் திட்டங்கள், எதிர்பார்த்த காலக்கட்டத்திற்கு முன்பே செயலாக்கத்திற்கு வந்துவிடும் என்பதற்கு உதாரணமாக, சமீபத்தில் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் விரைவில் திறக்கப்பட உள்ள கலைஞர் நினைவு நூலகம் போன்ற திட்டங்கள் சிறப்பான உதாரணங்களாக அமைந்திருக்கிறது.
முன்னேற்றம் தொய்வு
இதுபோன்று பல நல்ல திட்டங்களின் செயலாக்கத்தை பல ஆய்வு கூட்டங்களின் வாயிலாக விவாதித்ததன் விளைவாக, இன்று நமது மாநிலம் தேசிய அளவில் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. நம்முடைய இலக்கு என்பது தேசிய அளவில் முதலிடத்தை பெறுவது மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் தலைசிறந்து விளங்கவும் இத்தகைய ஆய்வு கூட்டங்களை சிறப்பான வாய்ப்பாகவே நான் கருதுகிறேன்.
ஒரு திட்டத்தின் வெற்றிக்கு பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம். அத்தகைய ஒருங்கிணைப்பை உறுதி செய்ய இதுபோன்ற ஆய்வு கூட்டங்கள் உங்களைப் போன்ற அரசின் உயர் அலுவலர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்பது, விரைந்து முடிக்கப்பட்ட திட்டங்களின் மூலம் அறிய முடிகிறது. அதே சமயத்தில், இந்த கூட்டத்தின் மூலம் இன்னும் சில திட்டங்களின் முன்னேற்றம் தொய்வாக உள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
5 மாதங்களில்...
இத்திட்டங்கள் விரைந்து முடிக்கப்படாவிட்டால் அவற்றின் முன்னேற்றம் பருவமழை போன்ற இயற்கை இடர்ப்பாடுகளால் மிகவும் பாதிக்கப்படும். பருவமழை தாண்டிய பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தாலும், அடுத்து வரப்போகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான நடத்தை விதிகள் போன்ற சூழ்நிலைகளால் பணிகளின் முன்னேற்றம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலை உள்ளது.
உங்களுக்கு திட்டங்களை விரைந்து முடிக்க வரும் நான்கு அல்லது ஐந்து மாதங்களே வாய்ப்பான காலமாக உள்ளது. எனவே, சரியான திட்டமிடுதலுடனும், உரிய வழிகாட்டுதலுடனும் திட்டங்களை நீங்கள் அணுகினால் வரும் 5 மாதங்கள் மாநிலத்தினுடைய பொற்கால வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட வலுவான காலங்களாக மாறும் என்பது உறுதி.
கவனம் செலுத்தப்பட வேண்டிய திட்டங்களை முடிப்பதற்கு தேவைப்படும் நிதி உதவி மற்றும் பிற துறைகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை விரைந்து பெற்று, சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் உறுதி அளித்துள்ள நாட்களில் தவறாமல் இத்திட்டங்களை தொடங்கி மக்கள் பயன்பாட்டிற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்.
மக்களின் பயன்பாடு
எனவே, இன்னும் 2 மாதங்கள் கழித்து இதேபோன்ற ஆய்வு கூட்டத்தில் உங்களை நான் சந்திக்கிறபோது, விவாதித்த பெரும்பாலான திட்டங்களில், சிறப்பான முன்னேற்றம் காணப்படும் என்றும், மக்களின் பயன்பாட்டுக்கு அவை கொண்டு வரப்பட்டுவிடும் என்றும் உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், முத்துசாமி, சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், சிவசங்கர், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், மதிவேந்தன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு துறைச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.