பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா
சோளிங்கர் ஒன்றியத்தில் பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கூடலூரில் மறைந்த பேராசிரியர் அன்பழகன் 100-வது பிறந்தநாள் நிகழ்ச்சி சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் நாகராஜ், ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார், மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ணசந்தர் ஆகியோர் கலந்துகொண்டு பேராசிரியர் அன்பழகன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினர். 150 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
சோளிங்கர் மத்திய ஒன்றியத்தில் கரிக்கால், கொடைக்கல் உள்ளிட்ட 10 ஊராட்சிக்களில் பேராசிரியர் அன்பழகன் 100-வது பிறந்தநாள் நிகழ்ச்சி மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ணசந்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் நாகராஜ் கலந்து கொண்டு அன்பழகன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்து, 250 மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் முதியோர், ஊனமுற்றோர், ஆதரவற்றோருக்கு நிதி உதவி வழங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணி, பொருளாளர் புருஷோத்தமன் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், மத்திய ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பாணாவரம் கூட்டு சாலை பகுதியில் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார்கள். வார்டு உறுப்பினர் பாஞ்சாலை, ஆசிரியர் பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.