சின்னசேலம் அருகே தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு லாரி டிரைவர் கைது
சின்னசேலம் அருகே தனியார் பஸ் கண்ணாடியை உடைத்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சின்னசேலம்,
கள்ளக்குறிச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் சேலம் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை சேலம் மாவட்டம் கெங்கவல்லி செந்தாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(வயது 44) என்பவர் ஓட்டினார். பஸ் சின்னசேலம் அடுத்த இந்திலி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தனியார் பஸ்சை வழிமறித்ததோடு, டிரைவரிடம் ஏன் அதிவேகமாக பஸ்சை ஓட்டுகிறாய்? என கேட்டு பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல்லால் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பஸ் கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பங்காரம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் குமார்(47) என்பது தெரிய வந்தது. இதையடுத்து பஸ் டிரைவர் கொடுத்த புகாரின்பேரில் லாரி டிரைவர் குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தனியார் பஸ்சில் வந்த பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.