ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதுமலை வருகை


ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதுமலை வருகை
x
தினத்தந்தி 5 Aug 2023 3:00 AM IST (Updated: 5 Aug 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதுமலைக்கு வருகை தருகிறார். இதையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நீலகிரி

கூடலூர்

பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதுமலைக்கு வருகை தருகிறார். இதையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி இன்று வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக, நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று (சனிக்கிழமை) வருகை தருகிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூரு விமான தளத்துக்கு மதியம் 2.30 மணிக்கு வருகிறார்.

பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு மசினகுடிக்கு வருகிறார். தொடர்ந்து அங்கிருந்து காரில் சிறப்பு பாதுகாப்பு படையினருடன் 7 கி.மீ. தொலைவில் உள்ள முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வருகை தருகிறார்.

முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் பாகன்கள், ஆதிவாசி மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார். மேலும் ஆஸ்கார் விருது பெற்ற 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தில் இடம் பிடித்த பாகன் தம்பதி பொம்மன், பெள்ளியை சந்திக்கிறார். தொடர்ந்து ஜனாதிபதி வளர்ப்பு யானைகளை பார்வையிடுகிறார். 1 மணி நேரம் மட்டும் தெப்பக்காடு முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இருக்கிறார்.

அங்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு காரில் மசினகுடிக்கு சென்று, அங்கிருந்து மாலை 5 மணிக்கு ஹெலிகாப்டரில் மைசூரு செல்கிறார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

5 அடுக்கு பாதுகாப்பு

ஜனாதிபதி வருகையையொட்டி கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 போலீஸ் சூப்பிரண்டுகள், 7 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 18 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 36 இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மசினகுடி, முதுமலை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்குள் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மசினகுடி-தெப்பக்காடு சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் முதுமலை வனப்பகுதிக்குள் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு வாகனங்கள் ஒத்திகை

இந்தநிலையில் மசினகுடி ஹெலிபேடில் இருந்து தெப்பக்காடு முகாம் வரை ஜனாதிபதி செல்லும் வழியில் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுப்பு ஒத்திகை நேற்று மாலை 3 மணிக்கு நடைபெற்றது. தொடர்ந்து மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் உள்ளதா என போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

ஜனாதிபதி வருகையையொட்டி மசினகுடி-தெப்பக்காடு சாலையில் இன்று சில மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளது. ஆனால், மைசூரு-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம் போல் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story