ஏரியா சபை கூட்டம் நடத்த முன்னேற்பாடுகள் தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிகாரி தகவல்
ஏரியா சபை கூட்டம் நடத்த முன்னேற்பாடு பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.
ஏரியா சபை கூட்டம்
தமிழகத்தில் மக்களின் அன்றாட தேவைகள் மற்றும் பிரச்சினைகளை எடுத்துக்கூறுவதற்கு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமான ஜனவரி 26-ந் தேதி, உழைப்பாளர் தினமான மே 1-ந் தேதி, சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந் தேதி, காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கிராம பஞ்சாயத்து தலைவர், கிராம சபை கூட்டத்துக்கு தலைமை தாங்குவார்.
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுவது போல நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் வார்டு கமிட்டி அமைத்து, வார்டு வாரியாக ஏரியா சபை (நகர சபை) கூட்டங்களை நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள வார்டுகள் தோறும், வார்டு கவுன்சிலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியை தவிர்த்து மற்ற பகுதிகளில் முதல் ஏரியா சபை கூட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 1-ந் தேதி உள்ளாட்சி தினத்தில் நடைபெற்றது.
குளறுபடி
இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், ஏரியா சபை உறுப்பினர்களின் பட்டியலுக்கு அனுமதி அளித்து, வார்டு வாரியாக உதவி பொறியாளர்களை ஏரியா சபைகளுக்கு செயலாளராக நியமித்து அவற்றை நடத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், வார்டு கமிட்டிக்கு 10 பேர் கொண்ட உறுப்பினர்களை நியமிப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டதால் ஏரியா சபை கூட்டம் நடத்துவது தள்ளிப்போனது. சில வார்டுகளில் கவுன்சிலர்கள் 10 பேர் கொண்ட உறுப்பினர்களின் பட்டியலை மாநகராட்சியிடம் ஒப்படைப்பதில் காலதாமதம் செய்து வந்தனர்.
பணிகள் தீவிரம்
இந்த நிலையில், கவுன்சிலர்கள் வார்டு கமிட்டி உறுப்பினர்களின் பட்டியலை மாநகராட்சியிடம் முழுமையாக ஒப்படைத்துள்ளனர். இதனால் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் சென்னை மாநகராட்சி வார்டுகளில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, "சென்னையில் உள்ள வார்டுகளில் ஏரியா சபை கூட்டங்களை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஏரியா சபை கூட்டத்தில் கவுன்சிலர்கள், உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன? என்பது குறித்த விவரங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் விரைவில் சுற்றறிக்கையாக அனுப்பப்படும். அதன்படி, இம்மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தில் கூட்டம் நடைபெறும்" என்றார்.