தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்


தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அகரக்கொந்தகை ஊராட்சியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

அகரக்கொந்தகை ஊராட்சியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் நலன் கருதி குத்தாலத்தில் அமைந்துள்ள திட்டச்சேரி துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அகரக்கொந்தகையில் இருந்து வாழ்மங்கலம் மோட்டார் கொட்டகைக்கு செல்லும் மின் கம்பிகள் சேதமடைந்து மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் வயல் பகுதியில் காற்று வேகமாக வீசும் போது மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு அறுந்து விழுந்து மின் வெட்டு ஏற்படுகிறது.

மின்வெட்டு

மேலும் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொள்வதால் அடிக்கடி மின்மாற்றியில் உள்ள வயர்கள் அறுந்து விடுகிறது. இதனால் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த மின்கம்பிகளை சீரமைத்து, தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதம் அடைந்துள்ளது

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி கூறுகையில்:-

அகரக்கொந்தகை ஊராட்சி பகுதிகளுக்கு திட்டச்சேரி துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு மின்கம்பத்தில் இருந்து மற்றொரு மின்கம்பத்திற்கு செல்லும் மின் கம்பிகள் சேதம் அடைந்து தாழ்வாக செல்கிறது.

இதனால் வேகமாக காற்று வீசும் போது மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் மின்தடை நீண்ட நேரம் நீடிப்பதால் பள்ளி குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் அவதிபட்டு வருகின்றனர். எனவே மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும் என்றார்.

பொதுமக்கள் அவதி

வாழ்மங்கலம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் கூறுகையில்:- அகரக்கொந்தகையில் இருந்து வாழ்மங்கலம் மோட்டார் கொட்டகைக்கு செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் காற்று வீசும்போது மின்கம்பிகள் ஒன்றை ஒன்று உரசி மின்தடை ஏற்படுகிறது.

இதனால் மின்மோட்டார்கள் இயக்க முடியாமல் வாழ்மங்கலம் பகுதி பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும் குடிநீர் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இது போன்ற மின்தடையால் முழுவதும் குடிநீர் கிடைக்காமலே பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர் என்றார்.



Next Story