காவி உடையில் அம்பேத்கர் சுவரொட்டி; இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது


காவி உடையில் அம்பேத்கர் சுவரொட்டி; இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது
x

கும்பகோணத்தில், காவி உடையில் அம்பேத்கர் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

கும்பகோணம்,

சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் குருமூர்த்தி, அம்பேத்கர் உருவ படத்தில் காவி உடை அணிவித்து விபூதி பூசி, குங்குமம் வைத்து சுவரொட்டிகள் ஒட்டியிருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் நிலையம் முன்பு போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கும்பகோணம் மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தியை போலீசார் வீட்டுக்காவலில் வைத்தனர்.

நேற்று மதியம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன், தொகுதி செயலாளர் முல்லைவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் ஆகியோர் கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு ஆதரவாளா்களுடன் வந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உடனடியாக அவர் கைது செய்யப்படுவார் எனவும் போலீசார் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.


Next Story