தென் மாவட்டங்களுக்கான தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம்
தென் மாவட்டங்களுக்கான தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம் நடக்க இருக்கிறது
தென்மண்டல தபால்துறைத்தலைவர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தபால்நிலையங்களுக்கான வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம் நடக்க உள்ளது. இது குறித்து தென்மண்டல தபால்துறை உதவி இயக்குனர் நவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மண்டல அளவிலான தபால்துறை தொடர்பான வாடிக்கையாளர்கள் குறைதீர்ப்பு முகாம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. பீ.பி.குளத்தில் உள்ள தென்மண்டல தபால்துறைத்தலைவர் அலுவலகத்தில் நடக்க உள்ள இந்த குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் புகார்தாரர்கள், மனுவில், தபால் அனுப்பிய தேதி, நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவர் பெயர், முகவரி, ரசீது எண், மணியார்டர், விரைவு தபால், பதிவு தபால் ஆகியவற்றின் விவரங்களை குறிப்பிட வேண்டும். சேமிப்பு வங்கி, தபால் காப்பீடு, கிராமிய தபால் காப்பீடு தொடர்பான புகார்களை சேமிப்பு கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், முகவரி, பாலிசிதாரரின் பெயர், முகவரி, பணம் செலுத்திய விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், முகவரி, கடித தொடர்புகள் இருந்தால் அதன் நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். ஏற்கனவே, தங்களது புகார் குறித்து முதுநிலை கண்காணிப்பாளர் பதிலளித்து திருப்தியடையாத வாடிக்கையாளர்கள் மட்டும் இந்த முகாமில் கலந்து கொள்ள முடியும். புதிதாக பதிவு செய்யப்படும் புகார்கள் பரிசீலனை செய்யப்படமாட்டாது. தனியார் கூரியரில் அனுப்பும் புகார் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த புகார் மனுக்களை வருகிற 15-ந் தேதிக்குள் உதவி இயக்குனர், தென்மண்டல தபால்துறைத்தலைவர், மதுரை-2 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தபால் உறையின் முன்பக்க மேல்பகுதியில் தபால்சேவை குறைதீர்ப்பு முகாம் ஜூன்-2023 என்று குறிப்பிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.