பழனி முருகன் கோவிலில் பூஜை நேரம் மாற்றம்


பழனி முருகன் கோவிலில் பூஜை நேரம் மாற்றம்
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்தநிலையில் பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-


கந்தசஷ்டி விழா தொடங்கும் நாளன்று மாலை 5.21 மணி முதல் 6.23 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்கிறது. பின்பு கந்தசஷ்டி திருவிழா காப்புக்கட்டு நடைபெறுகிது. பிற்பகல் 2.30 மணிக்கு மலைக்கோவில் மற்றும் உபகோவில்கள் அனைத்திலும் நடை சாத்தப்படும். எனவே நண்பகல் 12.30 மணிக்கு பிறகு பக்தர்கள் யாரும் படிப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவற்றின் மூலம் செல்ல அனுமதி இல்லை. சூரியகிரகணம் முடிந்த பின்பு 7 மணிக்கு மேல் சம்ரோஷன பூஜை நடக்கிறது.


இதைத்தொடர்ந்து சாயரட்சை பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெற்று வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். கந்தசஷ்டி திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருப்பது வழக்கம். இவ்வாறு விரதம் இருக்கும் பக்தர்கள், தங்குவதற்கு கோவில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிழக்கு கிரிவீதி பழைய நாதஸ்வர கல்லூரி, மேற்கு கிரிவீதி மின்இழுவை ரெயில்நிலையம் எதிரே உள்ள சின்னக்குமாரர் விடுதி ஆகிய இடங்களில் பக்தர்கள் கட்டணம் ஏதும் இல்லாமல் தங்கி கொள்ளலாம்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






Next Story