பாஜக குறித்து பொன்னையன் பேசியது, அவரது சொந்த கருத்து - எடப்பாடி பழனிசாமி பேட்டி


பாஜக குறித்து பொன்னையன் பேசியது, அவரது சொந்த கருத்து - எடப்பாடி பழனிசாமி பேட்டி
x

பாஜக குறித்து பொன்னையன் பேசியது, அவரது சொந்த கருத்து என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், அதிமுகவை பின்னுக்கு தள்ள பாஜக முயற்சி செய்வதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது அதிமுக- பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லாததால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்த வருகின்றன. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கொலை நடக்காத நாளே கிடையாது. திமுக அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஆதரவளித்த பாஜக, பாமக கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

வி.பி.துரைசாமி எந்தக் கட்சியில் இருந்து எந்தக் கட்சிக்கு சென்றார் என்பது அனைவருக்கும் தெரியும். வி.பி.துரைசாமி போன்ற கட்சி மாறி செல்பவர்கள் நாங்கள் இல்லை. சட்டமன்றத்தில் அதிமுக எப்படி செயல்படுகிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். அதனால், அதிமுகவின் செயல்பாட்டுக்கு வி.பி.துரைசாமி சான்றளிக்க தேவையில்லை.

பாஜக குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசியதை அவரது சொந்த கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.


Next Story