ரூ.1,000 ெராக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்
நீலகிரியில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 794 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
ஊட்டி,
நீலகிரியில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 794 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியம் நஞ்சநாடு ஊராட்சிக்கு உட்பட்ட எம்.பாலாடா ரேஷன் கடையில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரையுடன் ரூ.1,000 ரொக்கம் மற்றும் இலவச வேட்டி, சேலையை வழங்கி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
404 ரேஷன் கடைகள்
ஊட்டி குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய 6 தாலூக்காகளில் கூட்டுறவுத்துறையின் கீழ் உள்ள 335 ரேஷன் கடைகளில் 1,83,624 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் கீழ் 28 கடைகளில் 18,400 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் 26 கடைகளில் 15,535 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், எஸ்டேட் நிர்வாகத்தினரால் நடத்தப்படும் 15 கடைகளில் 2,235 ரேஷன் கார்டுதாரர்களுக்கும் என மொத்தம் 404 ரேஷன் கடைகளில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 794 கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1,000 என ரூ.21.97 லட்சம் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, நஞ்சநாடு ஊராட்சி தலைவர் சசிகலா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் முருகானந்தம், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளர் முத்துசிதம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.