போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
குறிஞ்சிப்பாடி அருகே கர்ப்பிணி மனைவி கோபித்து சென்றதால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குறிஞ்சிப்பாடி:
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாத்தூரான் வீதியை சேர்ந்தவர் அறிவழகன் மகன் வீரசேகரன்(வயது 30). மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்த இவருக்கும், பண்ருட்டி அருகே மருங்கூரை சேர்ந்த கவிப்பிரியா என்பவருக்கும் கடந்த 1.8.2022 அன்று திருமணம் நடைபெற்றது.
தற்போது கவிப்பிரியா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கவிப்பிரியா கணவரை கோபித்துக் கொண்டு தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட வீரசேகரன், நேற்று காலை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் வேட்டியால் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே வீரசேகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அறிவழகன் கொடுத்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி மனைவி கோபித்து சென்ற விரக்தியால் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.