பனைத்தொழிலாளர்களை போலீசார் தொந்தரவு செய்வதை தடுக்க கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் கள் இறக்கும் பனைத்தொழிலாளர்களை போலீசார் தொந்தரவு செய்வதை தடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
சுனாமி குடியிருப்பு மக்கள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
வேம்பார் சுனாமி குடியிருப்பை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி தாக்குதல் ஏற்பட்ட போது வேம்பார் கிராமத்தில் கடற்கரையில் வசித்து வந்த 30 முத்தரையர் இன குடும்பங்களை அரசு தற்காலிகமாக சுனாமி குடியிருப்பில் குடிசை வீடுகளில் தங்க வைத்தது. தொடர்ந்து அந்த பகுதியில் சுனாமி குடியிருப்பு வீடுகள் கட்டிய போது 13 குடும்பங்களுக்கு வீடு வழங்கினார்கள். மீதமுள்ள 20 குடும்பங்களுக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. குடிசை வீடுகள் சேதமடைந்துவிட்டன. எங்கள் வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர் வசதி கிடையாது. நாங்கள் மிகவும் வறுமை நிலையில் இருக்கிறோம். குழந்தைகளை படிக்க வைக்க முடியவில்லை. எனவே, அரசு எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இல்லையெனில் எங்களை கருணை கொலை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.
கழிவுநீர்
ஆழ்வார்திருநகரி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆத்தூர் பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ஆத்தூர் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாக்கடை கால்வாய் வழியாக தாமிரபரணி ஆற்றில் விடப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆறு மாசுபட்டு வருகிறது. திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் இந்த பகுதியில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
ஆத்தூர் சுற்றுவட்டார தேவேந்திரகுல உறவின்முறை நலச்சங்கத்தினர், தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ஆத்தூர் பேரூராட்சி பகுதியில் இருக்கும் லாடர் சத்திரம் சொத்துக்களை சில தனி நபர்கள் ஆக்கிரமித்து பத்திரப்பதிவு செய்து உள்ளனர். அதனை ரத்து செய்து, அந்த சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
கருத்து கேட்பு கூட்டம்
நெய்தல் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த பெசில், கெபிஸ்டன் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பாணையில் பல கடற்கரை கிராமங்கள், மக்கள் வாழும் பகுதிகள் விடுபட்டு உள்ளன. இது தொடர்பாக ஆகஸ்டு 4-ந்தேதிக்குள் மக்கள் இணையதளம் வாயிலாக கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. பாமர மீனவர்களால் இணையதளம் வாயிலாக கருத்துக்களை தெரிவிக்க இயலாது. எனவே, இது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும். மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.
பனைத்தொழிலாளர்
நாம் தமிழர் கட்சியினர், தூத்துக்குடி மக்களவை தொகுதி பொறுப்பாளர் சா.கிறிஸ்டன்டைன் ராஜசேகர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், மத்திய அரசு மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநில அரசுகளின் உணவு பட்டியலில் கள் இடம் பெற்றுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் போதைப் பொருள் பட்டியலில் கள் இருக்கிறது. எனவே, தமிழகத்திலும் கள்ளை உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும். மேலும், விஷக் கள் இறக்குவதாக கூறி பனைத் தொழிலாளர்களை போலீசார் தொந்தரவு செய்வதை உடனே நிறுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.