தோட்ட காவலாளி மீது துப்பாக்கி சூடு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


தோட்ட காவலாளி மீது துப்பாக்கி சூடு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

பழனி அருகே தோட்ட காவலாளியை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 35). இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் தனியார் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

இவரது தோட்டத்தில், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரை சேர்ந்த கார்த்தி (24) காவலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மோகன்ராஜ், கார்த்தி ஆகியோர் தோட்டத்தில் உள்ள அறையில் தங்கியிருந்தனர்.

துப்பாக்கி சூடு

இந்தநிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் தோட்ட பகுதியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து கார்த்தி வெளியே சென்று பார்த்தார். அப்போது யாரோ மர்ம நபர்கள் துப்பாக்கியால் கார்த்தியை சுட்டுவிட்டு தப்பியோடினர்.

இதில், கார்த்தியின் இடது மார்பு பகுதியில் குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த அவரை பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு கார்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதற்கிடையே பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி மற்றும் பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் துப்பாக்கி சூடு நடந்த பகுதியை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மர்ம நபர்கள், துப்பாக்கியால் கார்த்தியை சுட்டுவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதேபோல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பிடிக்க அவர் உத்தரவு பிறப்பித்தார்.

வேட்டைக்கும்பல் அட்டூழியம்

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கார்த்தி மீது பாய்ந்த குண்டு நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் வகையை சேர்ந்தது. தோட்டங்களில் தற்போது மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இதனால் முயல், காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை வேட்டையாடுவதற்காக வந்த கும்பல், கார்த்தியை துப்பாக்கியால் சுட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.


Next Story