விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதாக புகார்: நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் சோதனை
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீசார் திடீர் சோதனை செய்தனர்.
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீசார் திடீர் சோதனை செய்தனர்.
நெல்கொள்முதல் நிலையம்
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் விற்பனை செய்வதற்கு வசதியாக 61 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் பணம் வசூல் செய்வதாக விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் புகார் செய்தன. இதைத்தொடர்ந்து கொள்முதல் நிலையத்திற்கு வரும் விவசாயிகள் பணம் எதுவும் தர வேண்டாம் என்றும் நெல்லை விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் டோக்கன் வழங்கி வரிசைப்படி நெல் எடுக்க கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார்.
போலீசார் சோதனை
இந்த நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களில் தவறுகள் நடைபெறுகிறதா? என்பதை கண்டறிய அரசின் உத்தரவுப்படி சிவகங்கை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் சோதனை நடத்தினர். அவர்கள் சிவகங்கையை அடுத்த சோழபுரம் மற்றும் வேம்பத்தூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் சோதனை செய்தனர். கொள்முதல் நிலையங்களில் வரும் விவசாயிகளை முன்னுரிமை அடிப்படையில் செய்யப்படுகிறதா? என்றும் நெல் கொள்முதல் செய்யும் விவசாயிகளிடம் பணம் வசூலிக்கிறார்களா? என்றும் விசாரித்தனர்.