கடைசி தேர்வை எழுதிய மகிழ்ச்சியில் உற்சாகமாக துள்ளி குதித்த பிளஸ்-2 மாணவிகள்


கடைசி தேர்வை எழுதிய மகிழ்ச்சியில் உற்சாகமாக துள்ளி குதித்த பிளஸ்-2 மாணவிகள்
x

பிளஸ்-2 தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி தேர்வை எழுதிய மகிழ்ச்சியில் உற்சாகமாக பிளஸ்-2 மாணவிகள் துள்ளி குதித்தனர். வேதியியல் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவிகள் கூறினார்கள்.

ராமநாதபுரம்

பிளஸ்-2 தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி தேர்வை எழுதிய மகிழ்ச்சியில் உற்சாகமாக பிளஸ்-2 மாணவிகள் துள்ளி குதித்தனர். வேதியியல் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவிகள் கூறினார்கள்.

பிளஸ்-2 தேர்வு முடிந்தது

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ந் தேதி அன்று தொடங்கி நடைபெற்று வந்தது. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் 7,930 மாணவர்களும் 8,147 மாணவிகளும் என மொத்தம் 16 ஆயிரத்து 77 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 269 பேர் தனித்தேர்வர்களும், 88 பேர் மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். மாவட்டம் முழுவதும் இந்த தேர்விற்காக 65 மையங்கள் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த 22 நாட்களாக நடைபெற்று வந்த பிளஸ்-2 அரசு பொது தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது.

மாணவ-மாணவிகள் உற்சாகம்

கடைசி தேர்வு எழுதி முடித்துவிட்டு தேர்வு மையத்தில் இருந்து வெளியே வந்த மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் மையத்தை விட்டு வெளியே வந்தனர். பல மையங்களில் மாணவ-மாணவிகள் துள்ளி குதித்தபடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

அதுபோல் தங்களது பள்ளி படிப்பின் பள்ளி சீருடையுடன் கடைசி நாளான நேற்று மையத்தை விட்டு வெளியே வந்த மாணவிகள் ஒருவருக்கொருவர் கைகொடுத்தும் வாழ்த்துக்கள் தெரிவித்தும் தங்களது நட்பை பரிமாறிக் கொண்டனர்.

வேதியியல் தேர்வு

கடைசி நாள் தேர்வை எழுதி வெளியே வந்த ராமநாதபுரம் அருகே உரத்தூர் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி இளைய சூர்யா கூறும் போது,

பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களும் நல்ல முறையில் தேர்வு எழுதியுள்ளேன். எளிதாக இருந்தது. கடைசி தேர்வான வேதியியல் தேர்வு எதிர்பார்த்ததை விட எளிதாக இருந்தது. மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது அடுத்ததாக நீட் தேர்வு எழுதி டாக்டருக்கு படிக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.

உப்பூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி அசின் கூறும் போது, பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் எல்லா தேர்வும் நன்றாக எழுதியுள்ளேன் கடைசி தேர்வான வேதியியல் தேர்வும் எதிர்பார்த்ததை விட மிகவும் ஈஸியாகவே இருந்தது. வகுப்பறையில் எங்கள் ஆசிரியர்கள் சொன்னபடி மிகவும் சுலபமாக இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்ததாக நர்சிங் படிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளேன் இவ்வாறு அவர் கூறினார்.


Next Story