தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
நிலுவை சம்பளம் வழங்க கோரி கூடலூரில் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
நிலுவை சம்பளம் வழங்க கோரி கூடலூரில் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலுவை சம்பளம்
கூடலூரில் உள்ள தனியார் தேயிலை தோட்டம் மற்றும் தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்கு நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு பல வாரங்களாக சம்பளம் வழங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிலுவை சம்பளம் வழங்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து ஆர்.டி.ஓ., தாசில்தார், தொழிலாளர் நலத்துறையினர் தோட்ட நிர்வாகத்திடம் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் கூடலூர் தாலுகா அலுவலகத்தை தோட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இருப்பினும் இதுவரை தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
வேலைநிறுத்த போராட்டம்
இதைத்தொடர்ந்து நேற்று காலை வழக்கம் போல் தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். அப்போது சம்பளம் வழங்காததால் குடும்பத்தை நிர்வகிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாக கூறி தோட்ட தொழிலாளர்கள் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் தோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தொழிற்சாலைக்கு செல்லும் சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் குணசேகரன், முகமது கனி மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இதற்கிடையே தோட்ட தொழிலாளர்கள் நிலுவை சம்பளம் தொடர்பாக குன்னூர் தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறையினர், தொழிற்சங்கத்தினர் மற்றும் தோட்ட நிர்வாக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தை
இரவு வரை பேச்சுவார்த்தை நடைபெற்றதால் அதன் முடிவுகள் தெரியவில்லை. பின்னர் மாலை 5 மணி வரை காத்திருந்த தொழிலாளர்கள் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, நிலுவை சம்பள பாக்கியை வழங்கினால் மட்டுமே வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்படும் என்றனர்.