காணாமல் போன நீரோடையை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் மனு
வடிவேல் பட சினிமா பாணியில் கூடலூரில் காணாமல் போன நீரோடையை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.
ஊட்டி
வடிவேல் பட சினிமா பாணியில் கூடலூரில் காணாமல் போன நீரோடையை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். அதன்படி, நாம் தமிழர் கட்சியின் கூடலூர் தொகுதி செயலாளர் கேதீசுவரன் மற்றும் நிர்வாகிகள் கூடலூரில் காணாமல் போன நீரோடையை கண்டுபிடித்து தரும்படி கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
காணாமல் போன நீரோடை
மேல் கூடலூரில் இருந்து நடுக்கூடலூர், காசிம்வயல், துப்புக்குட்டி பேட்டை வழியாக பாண்டியாறுக்கு நீரோடை செல்கிறது. இதன் இடைப்பட்ட பகுதியான ராஜகோபால புரத்தில் நீரோடையை காண வில்லை. எனவே, உரிய ஆய்வு நடத்தி நீரோடையை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடலூரில் ஆக்கிரமிப்பில் உள்ள நீரோடையை மீட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. வடிவேல் பட சினிமா பாணியில் காணாமல் போன நீரோடையை கண்டுபிடித்து தரக்கோரி மனு அளிக்கப்பட்டு இருக்கிறது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் அம்ரித் கோரிக்கை மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை வசதிகளுக்கு தகுதி இருப்பின் முன்னுரிமை கொடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.