வடகரையாத்தூர் ஊராட்சியில்சமூக விரோத கும்பல் நடமாட்டம்


வடகரையாத்தூர் ஊராட்சியில்சமூக விரோத கும்பல் நடமாட்டம்
x

வடகரையாத்தூர் ஊராட்சியில் சமூக விரோத கும்பல் நடமாட்டம் இருப்பதாகவும், அவர்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாமக்கல்

கலெக்டரிடம் மனு

கபிலர்மலை ஒன்றியம் வடகரையாத்தூரை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வடகரையாத்தூர் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களை கடந்த 2 மாதங்களாக மறைமுகமாக அச்சுறுத்தும் வகையில் சமூக விரோத கும்பல் செயல்பட்டு வருகிறது.

அதனால் நாங்கள் தினமும் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களால் சாலையில் நடமாடவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும், இரவு நேரங்களில் விவசாய பணிகளுக்கும், தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கும், கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்கவும் போக முடியாத நிலை உள்ளது. அன்றாட தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

வடகரையாத்தூர் ஊராட்சியில் உள்ள தோட்ட வேலைக்கு கூட ஆட்கள் வந்து செல்ல அச்சப்படுகின்றனர். வரும் காலங்களில், பொதுமக்கள் மற்றும் வேலை ஆட்கள் வந்து செல்ல தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். கண்களுக்கு தென்படாமல் மறைமுகமாக செயல்படும் சமூக விரோத கும்பலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

பஸ்கள் நிறுத்தம்

இதேபோல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சங்ககிரி முதல் ஈரோடு வரை வெப்படை வழியாக 6 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் பஸ்களில் பெண்களுக்கான இலவச கட்டணம் அறிவித்த பிறகு 6 பஸ்களும் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்வசதி இன்றி தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஏற்கனவே சன்னியாசிபட்டி, எலந்தகுட்டை, வெடியரசம்பாளையம், மோடமங்கலம் போன்ற ஊராட்சிகளில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. எனவே சங்ககிரி பணிமனையில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து பஸ்களையும் மீண்டும் இயக்க வேண்டும். மேலும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப இன்னும் அதிக எண்ணிக்கையில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து துறைக்கு ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story