பெருவேம்புடையார் சாஸ்தா கோவில் கும்பாபிஷேகம்
வள்ளியூர் அருகே பெருவேம்புடையார் சாஸ்தா கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வள்ளியூ:
வள்ளியூர் அருகே ராஜாக்கள்மங்கலத்தில் மிகவும் பழமைவாய்ந்த பூர்ண புஷ்கலா அம்பாள் சமேத பெருவேம்புடையார் தர்ம சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மகா கும்பாபிஷேக விழா கடந்த 2-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு பூஜைகள் நடந்தது.
நேற்று காலையில் 4-ம் கால யாகசாலை பூஜையும், மகாபூர்ணாகுதியும், தீபாராதனை பூஜையும் நடந்தது. தொடர்ந்து புனித நீர் குடம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பெருவேம்புடையார் சாஸ்தா, பூர்ண புஷ்கலா அம்பாள், பூதநாதர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை பூஜை நடந்தது.
விழாவில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச சத்தியஞான தேசிக பரமாச்சார்ய சுவாமி, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் கவிதா, ஆய்வாளர் லதா, செயல் அலுவலர் முருகன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
17 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கும்பாபிஷேக விழாவில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.