மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நேற்று நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், நிலம் சம்பந்தமாக 82 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 32 மனுக்களும் வேலைவாய்ப்பு தொடர்பாக 24 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 52 மனுக்களும் இதர துறைகள் சம்பந்தமாக 81 மனுக்களும் என மொத்தம் 277 மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார். தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதன்பின்னர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 10 பயனாளிகளுக்கு தலா ரூ.5,480 வீதம் மொத்தம் ரூ.54,800 மதிப்பிலான தையல் எந்திரங்களையும், கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆவடி ஸ்ரீதேவி நகர் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.