மன்னை நகர் ரெயிலடி தெருவில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதி
மன்னை நகர் ரெயிலடி தெருவில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இங்கு கழிவறை, வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மன்னை நகர் ரெயிலடி தெருவில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இங்கு கழிவறை, வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அடிப்படை வசதிகள் இல்லை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னை நகர் ரெயிலடி தெருவில் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் சாலை வசதி, கழிவறை வசதி, மழை நீர், வடிகால் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை.
மேலும் இங்கு வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டாவும் இல்லை. சாதி சான்றிதழும் இல்லை. சுகாதார வசதி இல்லாமல் இந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மன்னை நகர் ரெயிலடி தெருவை நேரில் பார்வையிட்டு, சாலை வசதி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தவும், வீட்டு மனைப்பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
40 ஆண்டுகளாக...
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மாரியப்பன் கூறியதாவது:- மன்னை நகர் ரெயிலடி தெருவில் 100 குடும்பங்கள் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். ஒரு குடும்பத்துக்கு 5 பேருக்கு மேல் இருக்கிறார்கள். அனைவரும் மிகச்சிறிய வீட்டில் வசித்து வருகிறோம். போதுமான இடவசதி இல்லை. தெரு மிக குறுகியதாக உள்ளது.
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி இந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இந்த பகுதிக்கு பொதுக்கழிவறை வசதி இல்லை. திறந்த வெளியை கழிவறை போல பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதால், பெண்களும், முதியவர்களும் பல்வேறு சிரமங்களை சந்திக்கிறார்கள்.
தெருவை சுற்றிலும் புதர்கள் மண்டி, அதில் இருந்து விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் நுழைகின்றன. வீட்டுமனை பட்டா இல்லாததால் சில வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. எங்களுக்கு சாதி சான்றும் கிடையாது. இதனால் 9-ம் வகுப்புக்கு மேல் யாரும் படிக்கவில்லை.
காய்ச்சலால் பாதிப்பு
சுகாதார கேடு நிலவி வருவதால் இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் போன்ற உடல் நல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்து விட்டோம். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.