பொதுமக்களை அச்சுறுத்தும் மாடுகள்
திருத்துறைப்பூண்டியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
திருத்துறைப்பூண்டியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
போக்குவரத்து நெருக்கடி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். திருத்துறைப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 90-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் திருத்துறைப்பூண்டி நகர பகுதிகளுக்கு பல்வேறு தேவைகளுக்காக தினசரி வந்து செல்கின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு ஏராளமான மாணவர்கள் வந்து செல்கிறார்கள். திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் உள்ள மக்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து வரும் மக்கள் என திருத்துறைப்பூண்டி பகுதி எப்போதும் போக்குவரத்து நெருக்கடியுடன் காணப்படுகிறது.
விபத்துகள்
ஆஸ்பத்திரிகளுக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்வோர் என அத்தியாவசிய தேவைகளுக்காக பலர் வாகனங்களில் வந்து செல்லும் நிலையில் திருத்துறைப்பூண்டி நகரில் புறவழிச் சாலையும் இல்லை என்பதால், போக்குவரத்து நெருக்கடியால் நகர பகுதி அன்றாடம் திண்டாடுகிறது.
இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில்வே கேட், அண்ணா சிலை, காசு கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மாடுகள் சாலையின் குறுக்கும், நெடுக்குமாக சுற்றித்திரிகின்றன. அவை மக்களை அச்சுறுத்துவதால் விபத்துகள் அடிக்கடி நடக்கிறது.
சமூக ஆர்வலர்கள் வேதனை
இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரித்தும், மாட்டின் உரிமையாளர்கள் மாட்டை பிடித்து தங்கள் வீடுகளில் கட்டி வளர்க்க முன்வரவில்லை என சமூக ஆர்வலர்கள் ேவதனை தெரிவிக்கிறார்கள். ஆகையால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பெண்கள் கருத்து
இதுகுறித்து ஆட்டூர் ரோடு பகுதியை சேர்ந்த சுமதி கூறியதாவது:- பெண்கள் திருத்துறைப்பூண்டி நகரில் நடந்து செல்ல முடியவில்லை. குழந்தைகளையும் அழைத்து செல்ல முடியவில்லை. மாடுகள் எந்த நேரமும் முட்டித்தள்ளும் அபாயம் உள்ளது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மாடுகளால் அடிக்கடி விபத்துகளில் சிக்கி கொள்கிறார்கள். எனவே மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
மடப்புரத்தை சேர்ந்த குடும்பத் தலைவி பூங்குழலி:- திருத்துறைப்பூண்டி நகரில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதன் காரணமாக சாலையில் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டி உள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தும் மாடுகளை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த ேவண்டும். மேலும் கால்நடைகளை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிய விடும் அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றார்.