பிளாட்பார டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; மக்கள் கடும் அவதி


பிளாட்பார டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; மக்கள் கடும் அவதி
x

பிளாட்பார டிக்கெட் கட்டணம் திடீரென உயர்ந்துள்ளதால் ரெயில் நிலைய வாசலில் நின்று உறவினர்களை மக்கள் வழி அனுப்பி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

பிளாட்பார டிக்கெட் கட்டணம் திடீரென உயர்ந்துள்ளதால் ரெயில் நிலைய வாசலில் நின்று உறவினர்களை மக்கள் வழி அனுப்பி வருகிறார்கள்.

சுற்றுலா தலம்

பிரசித்திப்பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்றான தஞ்சையின் மையப்பகுதியில் உள்ளது தஞ்சை ரெயில் நிலையம். தென்னக ரெயில்வேயில் உள்ள திருச்சி கோட்டத்தில் தஞ்சை 2-வது பெரிய ரெயில் நிலையமாக திகழ்ந்து வருகிறது.

தஞ்சை ரெயில் நிலையம் வழியாக தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் என 40-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை வழியாக திருச்செந்தூர், சென்னை, ராமேசுவரம், வாரணாசி, நாகர்கோவில், எர்ணாகுளம், கோயம்புத்தூர், திருச்சி, காரைக்கால், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. அதுமட்டுமின்றி தஞ்சையில் இருந்தும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து மட்டும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம்செய்து வருகிறார்கள். வெளியூர்களுக்கு செல்லும் உறவினர்களை வழிஅனுப்பவும், வெளியூர்களில் இருந்து வரும் உறவினர்களை அழைத்து செல்வதற்கும் ஏராளமானோர் தஞ்சை ரெயில் நிலையம் வந்து செல்கின்றனர்.

ரூ.20-க்கு விற்பனை

இந்த நிலையில் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் உள்ள தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டுகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.10-க்கு விற்ற பிளாட்பார டிக்கெட் கொரோனா காலக்கட்டத்தில் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் அது மீண்டும் ரூ.10-க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பிளாட்பார டிக்கெட் கட்டணம் மேலும் ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.20-க்கு விற்கப்படுகின்றன. இந்த டிக்கெட்டை எடுத்தவர்கள் பிளாட்பாரங்களில் 2 மணி நேரம் இருக்கலாம்.

ரெயில் உபயோகிப்பாளர் அவதி

இந்த கட்டண உயர்வால் ரெயில் உபயோகிப்பாளர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து ரெயில் பயணிகள் கூறிய கருத்துகள் வருமாறு:-

தஞ்சை சீனிவாசபுரம் வாண்டையார் காலனியை சேர்ந்த ரவிச்சந்திரன்:- பிளாட்பார டிக்கெட் கட்டணம் ரூ.20 உயர்ந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் உறவினர்களை அழைப்பதற்காக ரெயில் நிலையத்திற்கு வருபவர்கள் வெளியிலேயே நின்று வழியனுப்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள் தான். சொந்த ஊருக்கு செல்ல பஸ்களில் டிக்கெட் கட்டணம் அதிகமாக உள்ளதால் ரெயில் பயணம் செய்கிறோம். இந்த நிலையில் பிளாட்பார டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும்.

திரும்ப பெற வேண்டும்

மயிலாடுதுறையை சேர்ந்த ரெயில் பயணி தமிழன்கணேசன் கூறுகையில், கொரோனா காலத்தில் ரெயில்வே பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 ஆக இருந்தது. பின்பு அது ரூ.10 ஆக குறைக்கப்பட்டது. இப்போது மீண்டும் இது ரூ.20 ஆக உயர்த்தப்படுவதால் ஏழைகள் முற்றிலுமாக பாதிக்கப்படுவார்கள். மேலும் வயதானவர்கள் பெண்கள் மற்றும் அதிக சுமைகளை வைத்துக்கொண்டு பயணம் செய்பவர்களை வழியனுப்ப வருபவர்கள், இந்த கட்டண உயர்வால் ரெயில்வே நிலைய வாசலிலே விட்டுவிட்டு சென்று விடுவார். இதனால் பெண்களும், முதியோர்களும், நோய்வாய்பட்டவர்களும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.

இந்த கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் ஏழைகள் அதிக சிரமத்திற்கு ஆளாவார்கள். எனவே ரெயில்வே துறை இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

பாபநாசத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்வேதா:-

நான் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். படிக்கிறேன். தினந்தோறும் ரெயிலில் கல்லூரிக்கு செல்கிறேன். என்னை கல்லூரிக்கு அனுப்ப வரும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிளாட்பாரம் டிக்கெட்டை ரூ.20-க்கு வாங்குகிறார்கள். இந்த கட்டணம் மிக அதிகம். கல்லூரி படிப்புக்கு அதிக செலவு ஆகிறது. இந்த நிலையில் பிளாட்பாரம் டிக்கெட்டும் உயர்ந்து இருப்பது பொருளாதார சுமையாக உள்ளது. எனவே மத்திய அரசு இந்த கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story