வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராம மக்கள்


வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராம மக்கள்
x

4-வது நாளாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராம மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.

மயிலாடுதுறை

4-வது நாளாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராம மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்கிருந்து உபரிநீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடிக்கு மேலாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியான அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை கடந்து செல்லும் கொள்ளிடம் ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால், கரையோர கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராமங்களான வெள்ளமணல், முதலைமேடுதிட்டு, நாதல்படுகை உள்ளிட்ட கிராமங்களை கடந்த 4 நாட்களாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு உள்ள 45.4 எக்டேர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி, பயிர்கள் நாசமாகி உள்ளன.

4-வது நாளாக வெள்ளம்

ஆற்றுப்படுகை கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி கரையோரத்தில் பாதுகாப்பான இடங்களில் தங்கி உள்ளனர். கொள்ளிடம் பகுதியில் அரசு சார்பில் நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு பலர் தங்கள் கால்நடைகளுடன் தங்கி உள்ளனர்.

இன்று 4-வது நாளாக கொள்ளிடம் ஆற்று வெள்ளம் கிராம குடியிருப்புகளை மூழ்கடித்தபடி சென்றது.

வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவிப்பு

கரைபுரண்டோடும் வெள்ளத்தால் கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராம மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். நேற்றும் ஏராளமானோர் தங்கள் கிராமங்களை விட்டு கரை பகுதிக்கு வந்த வண்ணம் இருந்தனர். நேற்றைய நிலவரப்படி கொள்ளிடத்தில் 1 லட்சத்து 59 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்றதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 3 நாட்களை விட இன்று கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரின் அளவு சற்று குறைந்து இருந்தது. ஆனாலும் கிராமங்களில் இருந்து தண்ணீர் வெளியேறவில்லை. கிராம மக்கள் சிலர் தங்களுடைய குடியிருப்புகளை பார்ப்பதற்காக படகில் சென்று வருகின்றனர்.

விவசாயிகள் கண்ணீர்

இந்த பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட தோட்டப்பயிர்கள் அனைத்தும் வீணாகி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் தண்ணீரால் சூழப்பட்டு சேதம் அடைந்துள்ளன. மாவட்ட நிர்வாகம் சார்பில் முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு உணவு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.


Next Story