பழுதடைந்த தொகுப்பு வீடுகளால் பரிதவிக்கும் மக்கள்
கிணத்துக்கடவு அருகே பழுதடைந்த தொகுப்பு வீடுகளால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். அவர்கள் தங்களது வீடுகளை சீரமைத்து தர அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளனர்.
தொகுப்பு வீடுகள்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியம் நல்லட்டிபாளையம் ஊராட்சி சென்றாம்பாளையம் பிரிவில் நரிக்குறவர் காலனி உள்ளது.
இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 31 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது.
இதில் பெரும்பாலான வீடுகளில் தற்போது மேற்கூரைகள் உடைந்தும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டும் உள்ளது. அதோடு சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும், அந்த வீடுகள் இடிந்து விழும் நிலை காணப்படுகிறது.
பரிதவிப்பு
இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். ஒருசிலர் வீட்டை காலி செய்துவிட்டு, அருகில் உள்ள காலி இடத்தில் குடிசை அமைத்து, வசித்து வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பழுதடைந்த வீடுகளில் அப்பகுதி மக்கள் பரிதவிக்கும் நிலை தொடர்கிறது.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
குடிசை அமைத்து...
முருகன்:-
எனக்கு மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். எங்களது வீட்டின் மேற்கூரை உடைந்து விட்டது. இதனால் அருகில் குடிசை அமைத்து வசிக்கிறோம். மழைக்காலத்தில் அந்த குடிசையில் வசிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. எங்கள் பகுதியில் உள்ள மற்ற வீடுகளும், இடிந்து விழும் அபாயத்தில் தான் உள்ளது. அதிகாரிகளிடம் எவ்வளவு எடுத்துக்கூறியும் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர்.
ரவி:-
எங்கள் பகுதியில் உள்ள பழுதடைந்த வீடுகளை சீரமைத்து தர அதிகாரிகளை வலியுறுத்தினோம். அதன் பேரில் வருவாய்த்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர். விரைவில் சீரமைத்து தருவதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எப்போதும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வசிக்க வேண்டியுள்ளது. யாருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே உடனடியாக வீடுகளை சீரமைத்து தர வேண்டும்.